யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தீவகப் பகுதியின் இரு பிரதேச செயலகத்திற்கு மின்பிறப்பாக்கி இன்மையால் மின்சாரம் தடைப்படும் 5 மணிநேரம் சேவையை பெற்றுக்கொள்ள முடியாமல் திரும்பி செல்லும் அவலம் இடம்பெறுகின்றதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
காரைநகர் மற்றும் ஊர்காவற்றுறை பிரதேசத்திற்கு தினமும் காலை 8 மணியில் இருந்து பகல் ஒரு மணிவரை மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது. இதனால் பிரதேச செயலகங்களிற்கான மின்சாரமும் தடைப்படுவதனால் பணிகள் யாவும் தடைப்படுகின்றது.
யாழ்மாவட்டத்திலுள்ள ஏனைய அனைத்து பிரதேச செயலகங்களிலும் மின்தடை ஏற்பட்டாலும் பல பணிகள் தாமதமின்றி நடைபெறுகிறது. ஆனால் காரைநகர், ஊர்காவற்றுறை பிரதேச செயலகங்களில் இது வரை அதற்கு மின்பிறப்பாக்கி எதுவும் இல்லை.
காரைநகர் பிரதேச செயலகம் அதனைப் பெறவும் எதுவித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் சேவையைப் பெறவரும் பொதுமக்கள் மிகச் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். பிரமாண நிதி ஒதுக்கீடுகள் பன்முகப்படுத்தப்பட்ட நிதி என பல நிதிகள் இப்பிரதேசத்துக்கு கிடைத்த போதும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய சேவை வழங்கும் பிரதேச செயலகத்திற்கான மின்பிறப்பாக்கியை பெற சம்பந்தப்பட்ட தரப்பினர் எவரும் எந்த முயற்சியையும் மேற்கொள்ளாதது சேவையில் அதிகார்களுக்கு இருக்கும்போது ஓர் அனர்த்தம் ஏற்பட்டால் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என கேள்வி எழுப்புகின்றனர்.
இது தொடர்பில் மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது ஊர்காவற்றுறை பிரதேச செயலக மின்பிறப்பாக்கியை திருத்துவதற்கு நடவடிக்கை இடம்பெறும் அதேநேரம் காரைநகருக்கு புதிய மின்பிறப்பாக்கி ஒன்றை கொள்வனவு செய்ய முயற்சிக்கப்படுகின்றது என்றார்.