தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் தொழில்சார் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வை வழங்குமாறு மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனத்தின், நிர்வாகத்திடம் மலையகத்தின் பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குவதற்கு முன்னர், தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு காத்திரமான நடவடிக்கை அவசியம் எனவும் இ.தொ.கா எடுத்துரைத்துள்ளது.
இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கும், மத்துரட்ட பெருந்தோட்ட நிர்வாகத்தினருக்கும் இடையிலான நேரடி கலந்துரையாடலொன்று இராகலை நகரிலுள்ள கலாசார மண்டபத்தில் ஷானிகா நடைபெற்றது.
மத்துரட்ட பெருந்தோட்ட நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி, முகாமையாளர்கள் உள்ளிட்டோர் நிர்வாகத்தின் சார்பில் பங்கேற்றனர்.
இராகலை, ஹைபொரஸ்ட், கோணபிட்டிய, மாகுடுகல உள்ளிட்ட தோட்ட மக்களும் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் பொது செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன், பிரதி தவிசாளர் பி. இராஜதுரை, உப தலைவர் பிலிப், காரியாலய உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த முத்தரப்பு கலந்துரையாடலின் போது தொழிலாளர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தனர். நிர்வாகம் காத்திரமான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.
தொழிலாளர்களின் கோரிக்கைகள் நியாயமானவை, அவை உடன் தீர்க்கப்பட வேண்டும் என தொழிற்சங்க பிரதிநிதிகள் இதன்போது வலியுறுத்தினர்.