நீதிமன்றங்கள் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என தண்டனை விதித்த நபர்களை, அரசியல் கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்களாக நியமிக்க கூடாது என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி, வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வோரை வேட்பாளர் பட்டியலில் சேர்த்தால் குறிப்பிட்ட அரசியல் கட்சிகள் பொது மக்களுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்.
ஜனாதிபதி தேர்தல் வன்முறையற்ற விதத்தில் இடம்பெற்றுள்ள சூழ்நிலையில் அரசியல் கட்சிகளை சுத்தம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தேசிய பட்டியல் வேட்பாளர்களாக நியமிப்பதற்கு தகுதியானவர்களை, அரசியல் கட்சிகள் தெரிவு செய்ய வேண்டும். பட்டியலில் ஒரு வேண்டத்தகாத வேட்பாளர் நியமிக்கப்பட்டாலும் அது ஒட்டுமொத்த கட்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். விரும்பத்தகாத அரசியல்வாதிகள் மீண்டும் தெரிவு செய்யப்படுவதை தவிர்க்கும் விதத்தில் மக்கள் வாக்களிக்க வேண்டும். என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.