நாடராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் கைதுக்கு, ஒட்டுமொத்த அரசாங்கமும் பொறுப்பு எனவும், நாடாளுமன்றத்தில் தங்கி நிற்கும் அரசாங்கம், நாடாளுமன்றத்தை மதிக்காமல் நடந்திருக்கின்றது எனவும், தமிழ்த் தேசியக் கட்சி தலைவர் ந.சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.
இன்று, ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த அறிக்கையில், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் கைதுசெய்யப்பட்டது, முற்றிலும் சட்டவிரோதமானதாகும்.
அவர் கைது செய்யப்பட்டதன் மூலம், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அவரது சிறப்புரிமை, அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.
கஜேந்திரகுமாரின் கைதுக்கு, பொலிஸார் பொறுப்பாக இருந்த போதிலும், அவர்கள் வெறும் கருவிதான்.
ஒட்டுமொத்த பொறுப்பும் அரசாங்கத்தினுடையது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவருடைய சிறப்புரிமையையும் மதிக்க வேண்டியது, அரசாங்கத்தின் கடமை.
கஜேந்திரகுமார் விவகாரத்தில் என்ன நடந்திருக்கின்றது?
நாடாளுமன்றத்தில் தங்கி நிற்கும் அரசாங்கம், நாடாளுமன்றத்தை மதிக்காமல் நடந்திருக்கின்றது.
அமர்வில் கலந்துகொள்ள முடியாமல், ஒரு உறுப்பினர் அரசாங்க உத்தரவின் பெயரில் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றார், கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
இதற்கு பொறுப்பெற்க வேண்டியவர் யார்?
பிரதமரா, பாதுகாப்பு அமைச்சரா,ஜனாதிபதியா அல்லது ஒட்டுமொத்த அமைச்சரவையும் ஜனாதிபதியுமா?
உண்மையில் கைது செய்யப்பட்டது கஜேந்திரகுமார் மட்டுமல்ல.
நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஜீவத் துடிப்புக்களில் ஒன்றான உறுப்பினர்களின் சிறப்புரிமையும் கூடத்தான்!.
ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எத்தனை பேர், இந்த விடயத்தை ஒழுங்காக புரிந்து கொள்ளும் நிலையில் இருக்கின்றார்கள்?.
நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் இந்த தாக்குதல் தொடர்பில், நிலைமையை சீர்செய்வதற்கு, சபாநாயகருக்கு இப்பொழுதும் காலம் கடந்துவிடவில்லை.
என தமிழ்த் தேசியக் கட்சி தலைவர் ந.சிறீகாந்தா குறிப்பிட்டுள்ளார்.