அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வரி விதிப்பு இலங்கையில் பொருளாதார சுனாமியை ஏற்படுத்தும் எனவும் தற்போதைய அரசாங்கம் இன்னும் அதன் ஆபத்தைப் புரிந்து கொள்ளவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
உலகம் ஏற்றுக்கொள்ளும் ஒழுங்கில் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் நாட்டின் வளர்ச்சிப் பயணத்திற்குச் சிறந்த மற்றும் வலுவான அடித்தளமாக அமைந்திருக்க வேண்டும். கம்யூனிச நாடுகளான சீனா வியட்நாம் போன்றனவும் முதலாளித்துவ நாடுகள் மற்றும் சோசலிச நாடுகளும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளன என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஆடைத் தொழிற்துறை நாட்டின் ஏற்றுமதி துறையில் முன்னணியில் உள்ள துறைகளில் ஒன்றாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரி விதித்த நாடுகள் மீது பரஸ்பர வரியை விதித்து அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதிலடியைக் கொடுத்துள்ளார். இதன் காரணமாக நமது நாட்டின் மீதும் 44 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. எனவே சர்வதேச வர்த்தகம் தொடர்பில் விசேட நிபுணத்துவ அறிவு கொண்ட ஒரு குழுவை அமெரிக்காவிற்கு அனுப்பி அந்த நாட்டு உயர்மட்ட தரப்புகளுடன் கலந்துரையாடி இலங்கைக்குத் தீர்வுகளை முன்வைப்பதே பொருத்தமானது.
இதனை தற்போதைய அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் பல முறை கூறியும் அரசாங்கம் அந்த ஆலோசனைகளைப் புறக்கணித்து ஆணவமான பதில்களை வழங்கியதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். இவ்வாறானதொரு நிலை ஏற்படும் என அரசாங்கம் அறிந்திருந்தும் அது தொடர்பில் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி எச்சரித்து யோசனைகளை முன்வைத்த போதும் அவற்றுக்கு அரசாங்கம் செவிசாய்க்கவில்லை இலங்கையின் ஏற்றுமதி துறையில் ஈடுபட்டுள்ள அனைவரும் கலக்கமடைந்துள்ளனர். ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் இந்த வரிக் கொள்கை அமுல்படுத்தப்படும். இந்த வரி விதிப்பு குறித்து உலக நாடுகள் அமெரிக்காவுடன் பேசி வருகின்றன.
எனினும் இலங்கை அவ்வாறான எந்த செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.