நுவரெலியா – நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி மாணவர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட கல்லூரி சமூகத்தால் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
தேர்ஸ்டன் கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து ஒன்று நானுஓயா, ரதல்ல – குறுக்கு வீதி பகுதியில் வான் மற்றும் ஆட்டோவை மோதித் தள்ளியதில் வானில் பயணித்த அறுவரும், ஆட்டோவில் இருந்த அதன் ஓட்டுநரும் உயிரிழந்தனர்.
வானில் பயணித்தவர்களில் படுகாயமடைந்த சிறுமியொருவர் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.
அவரின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக வங்கியில் 8 லட்சம் ரூபா வைப்பிலிடப்பட்டதுடன், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தார், சிறுமிக்கான கொடுப்பனவு உட்பட இந்த உதவித்திட்டத்துக்காக தேர்ஸ்டன் கல்லூரியால் 17 லட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.
குறித்த உதவித்தொகை நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கொலபொடவிடம் கல்லூரி அதிபரால், நுவரெலியா மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
கண்டி போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், நுவரெலியா பொலிஸ் தலைமையகத்தின் பிரதானி, நானுஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கல்லூரியின் பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் நிதி கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

