நிகழ்நிலை காப்புச் சட்ட மூலம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலங்களுக்கு எதிராக மட்டக்களப்பில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
பெருமளவான மக்கள் இப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
மட்டக்களப்பு மனித உரிமை செயற்பாட்டளார்களின் ஏற்பாட்டில், நாளை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ள நிகழ்நிலை காப்பு சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்
வகையில், கல்லடிப் பாலத்திற்கு அருகே இருந்து, காந்தி பூங்கா வரை கண்டனப் பேரணியொன்றும் இடம்பெற்றது.
இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
பேரணி காந்திபூங்காவைச் சென்றடைந்ததும், காந்தி பூங்கா முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் நிகழ்நிலை காப்பு சட்டமூலம், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் ஆகியவற்றிற்கு எதிராக
கோசங்களையும் எழுப்பினர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மகஜரொன்று அண்மையில் கையளிக்கப்பட்ட நிலையில், போராட்ட இடத்திற்கு வருகை தந்த
நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவிற்கும், மகஜர் கையளிக்கப்பட்டது.
நிகழ்நிலை காப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலங்களுக்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து, அடையாள உண்ணாவிரத
போராட்டமொன்றும் காந்திபூங்காவில் முன்னெடுக்கப்பட்டது.
சிவில் சமூக பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புக்களின் பிரநிதிகள் என பலரும், அடையாள உண்ணாவிரதப் போராட்டத்திலும் பங்கேற்றனர்.