எதிர்வரும் 23ம் திகதி நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம், நாடாளுமன்றத்தில் சமர்ப்ப்பிக்கப்படவுள்ள நிலையில், சட்டமூலத்தின் பாதக விடயங்களை
கருத்திற்கொண்டு, அதற்கு எதிராக வாக்களிக்குமாறு, மட்டக்களப்பு மாவட்ட எம்.பிக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்களால், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்கும் கோரிக்கை அடங்கிய மகஜர்களும்
இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனைச் சந்தித்த மனித உரிமை செயற்பாட்டளார்கள், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமூலத்திற்கு
எதிராக வாக்களிக்கும் கோரிக்கையடங்கிய மகஜரைக் கையளித்தனர்.
மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியில் அமைந்துள்ள இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் அலுவலகத்திற்குச் சென்ற
மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், அவரிடமும் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரைக் கையளித்தனர்.
வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரத்தின் பிரத்தியேக அலுவலகத்தில்
வைத்து, நாடாளுமன்ற உறுப்பினர் கருணாகரத்திடம் மகஜர் கையளிக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிடம், தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு தொகுதிக் காரியாலயத்தில் வைத்து மகஜர் கையளிக்கப்பட்டது.
இதேவேளை இந்த நிகழ்நிலை பாதுகாப்புச் சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், எதிர்வரும் 22ஆம் மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றும்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.