நிதி நிறுவன உரிமையாளரின் கடத்தலில் தொடர்புடைய பிக்கு கைது!

0
135

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள் என தம்மை அடையாளப்படுத்தியவர்களால் நிதி நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிக்கு ஒருவரை தெமட்டகொட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த மே 11ஆம் திகதி தெற்கு மாகொல பிரதேசத்தில் உள்ள நிதி நிறுவனமொன்றுக்கு சென்ற குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் எனக் கூறப்படும் இருவருடன், குறித்த பிக்குவும், அந்த நிறுவன உரிமையாளரைக் கடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அவரை கடத்திச் சென்று அவரது கடவுச்சீட்டு மற்றும் வீட்டுப் பத்திரத்தை வலுக்கட்டாயமாக சந்தேகநபர்கள் எடுத்துச் சென்றதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளாக தம்மை அடையாளப்படுத்திய காவல்துறை விசேட அதிரடிப்படையின் காவல்துறை சார்ஜன்ட் ஒருவரையும் காவல்துறை கான்ஸ்டபிள் சாரதி ஒருவரையும், கைது செய்யவுள்ளதாக தெமட்டகொட காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, குறித்த கடத்தல் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் காவல்துறை விசேட அதிரடிப்படை தலைமையகத்திற்கு சொந்தமான கெப் வாகனமொன்றையும் கைப்பற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.