நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசரின் இறுதி ஆராதனைகள் இன்று

0
9

நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனைகள் இன்று (26) நடைபெறவுள்ளன.

இலங்கை நேரப்படி இன்று மாலை 1.30 மணியளவில் வத்திக்கான் நகரில் உள்ள புனித பேதுரு சதுக்கத்தில் இறுதி ஆராதனைகள் நடைபெறவுள்ளன.

இறுதித் திருப்பலியை கர்தினால் கல்லூரியின் தலைவர் கர்தினால் ஜியோவானி பெட்டிஸ்டா ரே  நடத்தவுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் உட்பட 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை புனித பேதுரு பசிலிக்காவில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு கடந்த சில தினங்களாக இரவு முழுவதும் மக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், அது நேற்று இரவு 8 மணிக்கு (அந்நாட்டு நேரப்படி) நிறைவடைந்தது.

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி விருப்பத்திற்கு அமைய, அவரது உடல் ரோமில் உள்ள புனித மரியா மேஜியோரே பசிலிக்காவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இதற்கிடையில், பாப்பரசரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்கவுள்ளார்.

இதுதவிர, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன மற்றும் ஹெக்டர் அப்புஹாமி ஆகியோரும் வத்திக்கானுக்கு பயணமாகியுள்ளனர்.

நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனைகள் நடைபெறும் இன்றைய தினம் தேசிய துக்க தினமாக அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, இன்றைய தினம் (ஏப்ரல் 26) அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.