நுவரெலியாவில் திருநாவுக்கரசு ஆதீனம் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது!

0
221

நுவெரெலியாவில் திருநாவுக்கரசு ஆதீனம் இன்று தென்கையிலை ஆதீனத்தின் குருமுதல்வர் அகத்தியார் அடிகளாரின் தலைமையில் மெய்கண்டார் ஆதினத்தின் குருமுதல்வர் உமாபதிசிவம் அடிகளார் முன்னிலையில் அகில இலங்கை சைவ மகாசபை மற்றும் தமிழ்ச் சைவப்பேரவையின் உறுதுணையுடன்  அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

காலை ஒன்பது மணியளவில் நுவரெலியா, சிறீ முருகேசு சதுக்கத்தில் அமைந்துள்ள இலங்காதீஸ்வரர் திருக்கோவில் காயத்திரி சித்தர் பீடத்தில் பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமாகிய அங்குரார்பண வைபவத்தில்  இதுவரை காலமும் சித்தர்பீட குருமுல்வராக அறப்பணியும் சிவப்பணியும் ஆற்றிய நரசிங்க நவநீதசித்தர், திருநாவுக்கரசு ஆதின குருமுதல்வர் தவத்திரு திருஞானசோதி அடிகளாராக தென்கையிலை ஆதீனத்தின் குருமுதல்வர் அகத்தியர் அடிகளார் மற்றும் மெய்கண்டார் ஆதீனத்தின் குருமுதல்வர் உமாபதிசிவம் அடிகளார்களினால்  ஆச்சாரி அபிடேகம் செய்யப்பட்டு அருளாட்சி ஏற்பு வைபவம் சிறப்பாக இடம்பெற்றது.

இதனையடுத்து ஆதீன குருமுதல்வர்களின் ஆசியுரையும்  கலைநிகழ்வுகளும், விருந்தினர்கள் உரைகளும் நடைபெற்றன அதனைத்தொடர்ந்து அன்னதானமும் சிறப்புற இடம்பெற்றது.

இதன்போது தென்கையிலை ஆதீனத்தின் குருமுதல்வர் அகத்தியார் அடிகளார், இளையபட்டம் தம்பிரான் திருமூலர்,  மெய்கண்டார் ஆதீனத்தின் குருமுதல்வர் தவத்திரு உமாபதி சிவம் அடிகளார், மலையக இந்து குருமார் ஒன்றிய செயலாளர் சிவசிறீ வேலு சுரேஷ்வர சர்மா, காயத்திரி சித்தர்பீட பீடாதிபதி சுவாமி சிறி சக்திவேல் சந்திரமோகன் ஐயா, யோகி காகபுஜண்டர் கோபிநாத் சுவாமி, அகில இலங்கை சைவ மகாசபை பொதுச் செயலாளர் வைத்திய கலாநிதி பராநந்தகுமார்,
தமிழ்ச் சைவப்பேரவை பொதுச்செயலாளர் மருத்துவர் சுதர்சன், அகில இலங்கை சைவ மகாசபை பொருளாளர் அருள் சிவானந்தன், தமிழ்ச் சைவப்பேரவை பொருளாளர் சிவரூபன் ஆகியோருடன் அகில இலங்கை ரீதியாக சைவப் பெருமக்களும் அறநெறி ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.