சர்வதேச சட்டங்கள் மற்றும் நியமங்களுக்கு அமைவாகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைத் திருத்தியமைக்க இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்குமாறு சிவிகஸ் என்ற சர்வதேச சிவில் சமூக அமைப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின்கீழ் இயங்கும் உபகட்டமைப்பான சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பில் மீளாய்வு செய்யும் மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் 137 ஆவது கூட்டத்தொடர் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமான நிலையில், இலங்கை தொடர்பான மீளாய்வு எதிர்வரும் 8, 9 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இம்மீளாய்வுக்குழுவின் கூட்டத்தொடரை முன்னிறுத்தி மனித உரிமைகள் அமைப்புக்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் இலங்கை தொடர்பான தமது அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளன.
அதன்படி உலகளாவிய ரீதியில் சிவில் சமூக அமைப்புக்களின் செயற்பாடுகள் மற்றும் சிவில் சமூக இடைவெளியை வலுப்படுத்துவதை முன்னிறுத்தி தென்னாபிரிக்காவைத் தளமாகக்கொண்டியங்கிவரும் சிவில் சமூக அமைப்புக்களின் கூட்டிணைவான சிவிகஸ் அமைப்பு, இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து ஐ.நா மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவிடம் தமது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.