நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதால் மட்டக்களப்பு மாவட்டம் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றது.
இதேவேளை வீதிகளில் பாதுகாப்புத் தரப்பினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டில் கோவிட் தொற்று பெரும் ஆபத்தாக மாறியுள்ள நிலையில், நாடு முழுவதுமான பயணக்கட்டுப்பாடு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று இரவு 11 மணி தொடக்கம் எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணக் கட்டுப்பாடு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும் இந்த பயணக் கட்டுப்பாடு அன்றிரவு 11 மணி தொடக்கம் ஜூன் மாதம் 04 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

இதனைத் தொடந்து எதிர்வரும் ஜூன் மாதம் 4 ஆம் திகதி இரவு 11 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும் பயணக் கட்டுப்பாடு ஜூன் மாதம் 7 ஆம் திகதி வரை தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும் காலப்பகுதியில் விவசாய நடவடிக்கைகளை எவ்வித இடையூறுகளுமின்றி முன்னெடுக்க முடியும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

விவசாய உற்பத்திகளை விற்பனை செய்வதற்கு நடமாடும் வர்த்தக சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

நடமாடும் வர்த்தக சேவைக்கு பிரதேச செயலகத்தால் வழங்கப்படும் அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.