பற்றிக் பயிற்சி நெறியினை நிறைவுசெய்த பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

0
144

கிளிநொச்சி மாவட்டத்தில் வடமாகாண தொழிற்துறை திணைக்களம் நடாத்திய பெண்களுக்கான பற்றிக் பயிற்சி நெறியினை நிறைவுசெய்த பயிற்சியாளர்களுக்கான சான்றிதழ் வழங்கல் மற்றும் கைவினைப் பொருள் விற்பனை கண்காட்சி நிகழ்வு இன்று நடைபெற்றது.

கரைச்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், பிரதேச செயலாளர் ப.ஜெயகரன் தலைமையில் இன்று காலை நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு குறித்த பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்ததுடன், அவர்களது கைவினைப் பொருள்களை பார்வையிட்டு பயிற்சி வழங்கியவர்களுக்கும், பயிற்சியில் பங்குபற்றியவர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

இந்த நிகழ்வில் வடமாகாண தொழிற்துறை திணைக்கள பணிப்பாளர் வனஜா செல்வரட்ணம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இதன்போது, கரைச்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஜெயந்திநகர் கிராம அலுவலர் பிரிவில் ஒரு மாதகால பற்றிக் பயிற்சிகளை நிறைவு செய்த 15 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் முதன்முறையாக குறித்த பயிற்சி வடமாகாண தொழிற்துறை திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பற்றிக் கைவினைப் பொருள்கள் சுற்றுலாத் துறைகளைக் கவரும் வகையில் உற்பத்தி செய்யப்பட வேண்டும் எனவும், இந்த முயற்சி பாராட்டப்பட வேண்டியது என்றும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

நிகழ்வில் கரைச்சி பிரதேச செயலாளர், கிறிஸலிஸ் நிறுவன மாவட்ட முகாமையாளர், உதவிப் பிரதேச செயலாளர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், நிர்வாக கிராம அலுவலர், தொழிற்துறை திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பற்றிக் பயிற்சி நெறியினை நிறைவுசெய்த பயிற்சியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.