3 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை பெறுவது தொடர்பான பாகிஸ்தானின் கோரிக்கைக்கு, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பரிந்துரைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் மட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பாகிஸ்தான் நீண்ட காலமாக எதிர்பார்க்கும் குறுகிய கால கடனை பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் நேற்று காலாவதியாகும் நிலையில், சில மணி நேரத்திற்கு முன்னர் புதிய ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நேற்று அனுமதிக்கப்பட்டுள்ள கடன், சிறிய அளவிலாக இருந்த போதிலும், தற்போதைய நிலையில் இது பாகிஸ்தானுக்கு கிடைத்த வாய்ப்பாகும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இதன் மூலம், நாணய சமநிலை நெருக்கடி மற்றும் வீழ்சியடைந்த அந்நிய செலாவணி இருப்பு ஆகியவற்றை மேம்படுத்த முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உத்தியோகபூர்வ ஒப்பந்தம் தொடர்பான அறிவித்தல் பாகிஸ்தானிடம் கையளிக்கப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் நிதி தொடர்பான தலைவர் இஷாக் டா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாகிஸ்தானின் நட்பு நாடுகளான சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் என்பன மேலதிக நிதி உதவியினை வழங்க முன்வந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.