ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்று திங்கட்கிழமை நாட்டை வந்தடைந்தார். அவர் நாளை செவ்வாய்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பான் கீ மூன், காலநிலை மாற்றம் மற்றும் நிலைப்பேர் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட உள்ளார்.
தென் கொரிய அரசின் உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் தலைவரான பான் கீ மூன் கால நிலை மாற்றம் மற்றும் பசுமை அபிவிருத்தி திட்டங்களில் இலங்கையுடன் ஒன்றிணைந்து செயற்படவுள்ளதுடன் அவரது வருகையின் பின்னர் பல பசுமை பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேயவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையில் ஸ்தாபிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகம் குறித்து பான் கீ மூன் அரசாங்கத்துடன் கலந்துரையாடவுள்ளார்.
இருதரப்பு கூட்டாண்மையின் கீழ் காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகம் முன்னெடுப்பது குறித்தும் அவதானம் செலுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.