பாராளுமன்றத்தை ஒத்திவைத்தமைக்கான காரணத்தை ஜனாதிபதி கூறவில்லை

0
134

நாடு நெருக்கடியான சூழலை எதிர்கொண்டு இருக்கும்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பாராளுமன்றத்தை அவசரமாக ஒத்திவைத்தார். எனினும் அதற்கான விளக்கத்தை அவர் வழங்கவில்லை. பாராளுமன்றம் என்பது மக்களின் குரல் என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மிகமிக அவசரமாக பாராளுமன்றத்தை ஒத்திவைத்தார். பாராளுமன்றத்தில் மிக முக்கியமான குழுக்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையிலேயே பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏன் இவ்வாறு பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது என்று மக்கள் கேள்வி எழுப்பினர்.

மிக முக்கியமான குழுக்கள் குறிப்பாக அரச நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல்மோசடிகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுக்கள் உண்மைகளை வெளிப்படுத்திக்கொண்டு இருந்தபோதே ஜனாதிபதி பாராளுமன்றத்தை ஒத்திவைத்தார்.

குறித்த குழுக்கள் செயலிழந்த போவதே பாராளுமன்றத்தை ஒத்திவைத்தற்கான பிரதிபலனாக இருந்தது.

கடந்த காலங்களில் குறித்த குழுக்களில் எதிர்க்கட்சியினர் நியமிக்கப்பட்டனர்.

எனினும் தற்போதைய அரசாங்கம் இந்தக் குழுக்களுக்கு தமது கட்சியின் உறுப்பினர்களை தலைவர்களாக நியமித்தது.

பாராளுமன்றம் என்பது மக்களது குரல், கண்கள், செவிகளாகும்.

இந்நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்தார். எனினும் அதற்கான பதிலை அவர் வழங்கவில்லை. இது உண்மையில் துரதிஸ்டமான நிலைமையாகும்.

இது விடயத்தில் ஜனாதிபதியின் நோக்கம் என்னவென்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அரசாங்கம் மக்களின் வாழ்க்கையை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் பின்னோக்கி அல்ல.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. என்ன நடந்துள்ளது என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஜனாதிபதியின் உரை அவரது முகத்தளப்புத்தக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அந்தப் பக்கத்துக்கு சென்று பாருங்கள். ஜனாபதி உரை தொடர்பிலான பதிவுக்கு எவ்வாறான கருத்துக்களை மக்கள் முன்வைத்துள்ளார்கள் என்பதை பாருங்கள்.

கற்பனை உலகத்தை நம்பி மக்கள் ஏமாறப் போவதில்லை. மக்கள் புத்திசாலிகள்.

மேலும் ரோஜா பூக்களை காண்பிப்பதற்கு முயல வேண்டாம் என்றே கோருகின்றோம்.

ஜனாதிபதி தனது கொள்கை விளக்கவுரையில் எதனை கூறினார். இந்த நாட்டு மக்கள் தற்போது எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கான தீர்வு ஜனாதிபதியின் உரையில் இல்லை. கற்பனை உலகில் இருப்பவரை போன்றே ஜனாதிபதி கருத்துரையாற்றினார்.