புத்தளத்தில் மழை, வெள்ளத்தால் 30, 598 பேர் பாதிப்பு

0
34

புத்தளம் மாவட்டத்தில் கடும் மழை, வெள்ளப் பெருக்கால் இதுவரை 9034 குடும்பங்களைச் சேர்ந்த 30, 598 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் புத்தளம், முந்தல், கற்பிட்டி, வன்னாத்தவில்லுவ, நாத்தாண்டிய, மாதம்பை, ஆராச்சிக்கட்டுவ, பல்லம, தங்கொட்டுவ, மஹாவெவ, சிலாபம், கருவலகஸ்வெவ மற்றும் வென்னப்புவ ஆகிய 13 பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 176 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த 9034 குடும்பங்களைச் சேர்ந்த 30, 598 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் சிலாபம் பிரதேச செயலாளர் பிரிவிலேயே அதிகளவிலான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இங்கு 15 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 2181 குடும்பங்களைச் சேர்ந்த 8627 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் 19 பாதுகாப்பு நிலையங்களில் 942 குடும்பங்களைச் சேர்ந்த 3748 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கற்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவில் 3 நிலையங்களில் 41 குடும்பங்களைச் சேர்ந்த 155 பேரும், சிலாபம் பிரதேச செயலாளர் பிரிவில் 13 நிலையங்களில் 896 குடும்பங்களைச் சேர்ந்த 3574 பேரும், ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு நிலையத்தில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேரும், புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு நிலையத்தில் ஒருவரும், நாத்தாண்டிய பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு நிலையத்தில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 61 குடும்பங்களை சேர்ந்த 220 பேர் தமது உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தினால் 46 வீடுகளும், 3 வர்த்தக நிலையங்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

வெள்ளம் காரணமாக புத்தளம் மாவட்டத்தில் இதுவரை இருவர் உயிரிழந்தனர். இருவர் காயமடைந்தனர் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.