புஷ்பிகாவை வைத்து லொஹானை வறுத்தெடுத்த மைத்திரி!

0
120

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியையும், அதன் தலைவர் மைத்திரிபால சிறிசேனவையும் கடுமையாக விமர்சித்துவரும் மொட்டு கட்சி உறுப்பினர்களின் பட்டியலில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேயும் உள்ளடங்குகின்றார்.

9 ஆவது நாடாளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடர் கடந்த 18 ஆம் திகதி ஆரம்பமானது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அன்றைய தினம் சபைக்கு வந்திருந்தார்.

அவர் சென்ற ‘லிப்டில்’, இராஜாங்க அமைச்சர் லொஹானும் இருந்துள்ளார்.

“ஹா….லொஹான் எப்படி சுகம், வாழ்த்துகள்” என மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

“எதற்காக எனக்கு வாழ்த்து, அப்படி என்ன நல்லது நடந்துள்ளது” என லொஹான் ரத்வத்த வினவியுள்ளார்.

“ அதான் உங்கள் ஆள் 4ஆவது இடத்தை பிடித்துள்ளார். அதற்காகத்தான் இந்த வாழ்த்து…” என்று சிரித்தப்படியே மைத்திரி பதில் வழங்கியுள்ளார்.

ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு என்பதுபோல, இக்கட்டானசூழ்நிலையிலும் நீங்கள் ஏன் இதை பற்றியெல்லாம் சிந்திக்கின்றீர்கள் என லொஹான் ரத்வத்த குறிப்பிட்டுள்ளார்.

இருவரும் லிப்டில் இருந்து வெளியே வந்துள்ளனர். அப்போது அமைச்சர் ரமேஷ் பத்திரண அங்கு வந்தார். அவரிடமும் மைத்திரி இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

திருமதி உலக அழகி போட்டியில் பங்கேற்ற புஷ்பிகா டி சில்வா நான்காவது இடத்தை பிடித்தார். இந்த விடயத்தை மையப்படுத்தியே மைத்திரி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

லொஹான் ரத்வத்த சிறைச்சாலைக்கு மதுபோதையில் அத்துமீறி நுழைந்தபோது, இந்த அழகியும் இருந்தாரென அப்போது தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.