விண்கற்களால் பூமிக்கு ஆபத்து இருப்பதாக ஆய்வாளர்கள் தொடர்ந்தும் எச்சரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிலிப்பைன்ஸ் அருகே விண்கல் ஒன்று விழுந்திருப்பது மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இது அளவில் பெரியது இல்லை என்பதால், எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
ஆசியக் கண்டத்தின் அற்புதமான சில நாடுகளில் பிலிப்பைன்ஸும் ஒன்று.
இங்கு ஒளி மாசு ஒப்பிட்டளவில் குறைவாக இருப்பதால், இரவு வானத்தை வெறும் கண்களால் பார்த்து இரசிக்க முடியும்.
அதாவது, ஒளி மாசு குறைவாக இருக்கும் பகுதியில் தான் பிரபஞ்சத்தின் சில பகுதிகளை வெறும் கண்களால் பார்க்க முடியும்.
ஆனால், நேற்றிரவு திடீரென சூரியனைப் போன்ற வெளிச்சம் தோன்றி மறைந்திருக்கிறது.
பலருக்கும் இந்த வெளிச்சம் எப்படித் தோன்றியது என்பது தெரியவில்லை.
இதுகுறித்து விஞ்ஞானிகள் தற்போது விளக்கமளித்துள்ளனர்.
அதாவது 2024 RW1 எனும் விண்கல் பூமியின் மீது மோதியதன் விளைவாகவே இந்த வெளிச்சம் ஏற்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளனர்.
இவ்வாறான ஒரு விண்கல் பூமிக்கு அருகில் இருப்பதைக் கடந்த 2ஆம் திகதி விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியிருந்த நிலையில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது சுமார் ஒரு மீற்றர் அளவுள்ள கல்லாகும்.
இந்தக் கல் பூமியின் மீது மிக வேகமாக மோதியிருக்கிறது.
வழக்கமாகத் தினமும் சில விண்கற்கள் பூமியின் மீது மோதத் தான் செய்கிறது. ஆனால் அவை அளவில் சிறியதாக இருப்பதால், வளிமண்டலத்தில் உரசித் தீப்பற்றி எரிந்து சாம்பலாகிவிடுகிறது.
அதேபோல 2024 RW1 விண்கல்லும் எரிந்து சாம்பலாகியுள்ளது.
இது எரிந்தபோது ஏற்பட்ட வெளிச்சம்தான் மொத்த பிலிப்பைன்ஸையே ஒரு விநாடிக்கு வெளிச்சமாக்கியுள்ளது.