பெலியத்தை துப்பாக்கிச் சூட்டில் 05 பேரைக் கொன்ற சம்பவத்தின் பிரதான துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் நபரின் மனைவி மற்றும் தந்தையை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் தற்போது கடற்படையில் ஓய்வூதியம் பெற்று வரும் முன்னாள் கடற்படை வீரர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொலையின் பிரதான துப்பாக்கிதாரியின் 39 வயதான மனைவியும், 72 வயதான தந்தையும் 21 கிராம் 350 மில்லிகிராம் ஹெரோயினுடன் பல்லேவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாதகம, முத்தரகம பகுதியில் மறைத்திருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பிரதான துப்பாக்கிதாரியான ஓய்வுபெற்ற கடற்படை சிப்பாய் கடந்த 21ஆம் திகதி பெலியத்த பகுதிக்கு பேருந்தில் சென்று 22ஆம் திகதி துப்பாக்கிச் சூடு நடத்திய மேலும் இருவருடன் இந்த கொலைகளை மேற்கொண்டு டுபாய்க்கு தப்பிச் சென்றதாக தெரியவந்துள்ளது.
டுபாயில் உள்ள நிபுன என்ற நபர் மூலம் விமான டிக்கெட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பாதாள உலகக் கும்பல் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கொஸ்கொட சுஜீயின் நெருங்கிய உறவினரும் தற்போது டுபாயில் தலைமறைவாகியுள்ள ஹர்ஷ என்ற ஹரேந்திர குணதிலக்கவின் வழிகாட்டலில் இந்த படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.