பொலிஸ் நிலைய காவலில் உயிரிழந்த
விதுசனின் வழக்கு விசாரணை

0
201

மட்டக்களப்பில் பொலிஸ் நிலைய காவலில் இருந்த போது உயிரிழந்த விதுசனின் வழக்கு இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி பீட்டர் போல் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணைகளின் பின் இளைஞனின் உடலை பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு நீதிவான் உத்தரவினை பிறப்பித்துள்ளதுடன் வழக்கு விசாரணை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 19ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 03ம் திகதி இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள வீட்டில் போதைப்பொருள் வைத்திருந்ததாக தெரிவித்து விதுசன் என்ற இளைஞர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த இளைஞன் பொலிஸ் காவலில் இருந்த போது உயிரிழந்துள்ளார்

இதன்போது குறித்த இளைஞன் ஐஸ் போதைப்பொருள் பக்கட்டை விழுங்கியதால் அது வயிற்றினுள் வெடித்து உயிரிழந்துள்ளதாக பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டிருந்தது, எனினும் அதனை குறித்த இளைஞனின் பெற்றோர் மறுத்திருந்ததுடன் தனது மகனை பொலிஸார் தாக்கியதாலேயே உயிரிழந்திருந்ததாக தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து குறித்த இளைஞனின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணைகளின் போது இளைஞனின் உடல் பிரேத பரிசோதனைகாக மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதனை பல்கலைக்கழக பேராசிரியருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, ஒருவருடம் கடந்தும்; மகனின் மரணம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் குறித்த வழக்கு தொடர்பாக குறித்த வழக்குடன் தொடர்புடைய வைத்தியர் மருத்துவ அறிக்கைகளுடன் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 19ஆம் திகதிக்கு நீதிமன்றில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக விதுசனின் பெற்றோர் தெரிவித்தனர்