தேசிய மக்கள் சக்திக்கு வழங்கப்பட்ட பொது ஆணையை அபகரிக்க எடுக்கப்படும் எந்தவொரு முயற்சியும் கடுமையான நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் 60வது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
267 உள்ளூராட்சி மன்றங்களை நிர்வகிக்க தேசிய மக்கள் சக்தி ஆணையைப் பெற்றுள்ளது.
இதன் அடிப்படையில் முதலில் 152 உள்ளூராட்சி மன்றங்களிலும், மீதமுள்ள 115 உள்ளூராட்சி மன்றங்களிலும் விரைவில் கட்டுப்பாட்டை நிறுவ திட்டமிட்டுள்ளோம்.
எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்வதற்கான ஆணையை கொண்டிருக்கவில்லை.
இந்தநிலையில் பொது ஆணையை எதிர்த்து உருவாக்கப்படும் எந்தவொரு சபையும்; மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு மேல் நீடிக்காது.
நாடாளுமன்றத்தில் எமது கட்சிக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருப்பதை நினைவூட்ட விரும்புகின்றேன்.
நாம் பிற அரசியல்வாதிகளை போல எம்மை வளப்படுத்திக்கொள்ளவும் எம்மை சுற்றியுள்ள உறவினர் நண்பர்களை மாத்திரம் வளப்படுத்திக்கொள்ளவும் ஆட்சிக்கு வரவில்லை.
நாட்டின் மீதுள்ள பற்றினாலும் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்ற அதீத ஆசையிலும் தான் பல போராட்டங்களின் பின்னர் இந்த ஆட்சியை மக்கள் ஆணையுடன் அமைத்திருக்கின்றோம்.