மட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடியில், பிரதேசத்தின் அபிவிருத்திக்கான கலந்துரையாடல் இடம்பெற்றது.
ஏ.எச்.ஆர்.சி.எனும் அரச சார்பற்ற நிறுவனத்தினால், ‘கிழக்கு மாகாணத்தின் ஜனநாயக பங்குதாரர்களுக்கான ஓர் இடம்’ என்ற தொனிப்பொருளில்
கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.
பிரதேசத்தின் அபிவிருத்திக்காக உள்ளூர் ஊடகவியலாளர்கள், சிவில் சமூக அமைப்புக்கள், உள்ளூராட்சி சபை உத்தியோகஸ்த்தர்களுக்கிடையே உறவை வலுப்படுத்துவதன்
மூலம் உண்மைத் தன்மை, வெளிப்பாட்டு தன்மை மற்றும் பொறுப்புக் கூறல் என்ற அடிப்படையில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது பிரதேச சபையினால் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி பணிகள், மக்கள் சேவை தொடர்பான பணிகள், பிரதேசத்தில் நாளாந்தம் பொதுமக்கள்
எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு அதற்கு எவ்வாறு தீர்வு காண்பது தொடர்பாக ஆராயப்பட்டது.
செங்கலடி பிரதேச சபைக்குட்பட் பிரதேசத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு பெறுதல், யானை தொல்லை, வடிகான் அமைத்தல், அரிசி ஆலைகளை அமைப்பதனால்
பொதுமக்கள் எதிர் நோக்கும் சுவாசப் பிரச்சினை, தொழிற்சாலை அமைப்பதற்கு அனுமதி வழங்கும்போது பொதுமக்களின் நலனில் கவனம் செலுத்துதல்,கட்டாக்காலி மாடுகளினால்
ஏற்படும் விபத்துக்கள் தவிர்ப்பது தொடர்பாகவும் பராமரிப்பாளருக்கு எதிராக தண்டப்பணம் வசுலிப்பது, மின் விளக்குகள் பொருத்துதல்,திண்மக் கழிவகற்றல் செயற்பாடு தொடர்பான
முகாமைத்துவம் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
கலந்துரையாடலில், நிகழ்வில் பிரதேசத்தில் உள்ள சன சமூக நிலைய உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், பிரதேச சபையின் உத்தியோகஸ்த்தர்கள், மற்றும் ஏ.எச்.ஆர்.சி.நிறுவனத்தின் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.