மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி குழுக்கூட்டம்

0
171

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் இந்த ஆண்டுக்கான முதலாவது அபிவிருத்தி குழுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

கடந்த ஆண்டு போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இதன்போது ஆராயப்பட்டதுடன்போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் 239மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்ட 148திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டதுடன் அவற்றினை விரைவாக நிறைவுசெய்யவேண்டும் என்ற அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.

இதேபோன்று இந்த ஆண்டு 183மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டது.குறிப்பாக வரவு செலவு திட்டம் ஊடாக காலாண்டு திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை முழுமையாக பயன்படுத்தவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பிரதேச செயலகப்பிரிவில் முன்னெடுக்கப்படும் வீதி புனரமைப்பு பணிகள்,குடிநீர் விநியோக செயற்றிட்டங்கள்,வீடமைப்பு திட்டங்கள் மற்றும் விவசாய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றினை விரைவுபடுத்துமாறும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் செல்வி இராகுலநாயகியின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்த பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன்,பிரதேசசபை தவிசாளர் யோ.ரஜனி,பொதுஜன பெரமுன மாவட்ட அமைப்பாளரும் பிரதேச இணைத்தலைவருமான பா.சந்திரகுமார் உட்பட திணைக்கள தலைவர்கள்,உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.