எமது சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு மிக்க பிரஜைகள் நாமே எனும் உறுதியுரை விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்பு வவுணதீவுப் பிரதேசத்தில் நேற்று நடைபெற்றது.
மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனம் அக்ஷன் யுனிற்றி லங்கா நிறுவனத்துடன் இணைந்து சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கவும் சிறுவர்களை பாதுகாப்பதற்குமான இந்த விழிப்புணர்வு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
மட்டக்களப்பு ஆயித்தியமலை சதாசகாய மாதா திருத்தலத்தை நோக்கிய வருடாந்த திருவிழா பாதயாத்திரை நேற்று வவுணதீவு வழியாகச் சென்றபொழுது பாத யாத்திரையில் கலந்து கொண்ட பொதுமக்கள் இந்த உறுதியுரையிலும் கைச்சாத்திட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
2700 பேர் சிறுவர்களைப் பாதுகாப்போம் எனும் உறுதியுரைப் பிரகடனத்தில் கையெழுத்திட்டதாக அக்ஷன் யுனிற்றி லங்கா நிறுவனத்தின் அலுவலர் அனுலா அன்ரன் தெரிவித்தார். இந்த செயற்பாட்டின் மூலம் சிறுவர் பாதுகாப்புக்கு நாமே பொறுப்பாளிகள் என்பதை ஒவ்வொரு பிரஜையும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே பிரதான பரிந்துரையாக இருந்ததாக அனுலா மேலும் தெரிவித்தார்.
‘எமது சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு மிக்க பிரஜைகள் நாமே. இன்று நான் கையெழுத்திடுவதன் ஊடாக எமது சிறுவர்களின் பாதுகாப்பிற்காகவும் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கும் குரல் கொடுக்கும் பொறுப்புள்ளவர் என்பதை உறுதி செய்கின்றேன்.’ என்று கையெழுத்திடும் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.