மட்டு. கொக்கட்டிச்சோலை- அம்பிளாந்துறை வீதியை புனரமைத்துத் தருமாறு போராட்டம்

0
158

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொக்கட்டிச்சோலை –அம்பிளாந்துறை பிரதான வீதியை புனரமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.
நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்படும் கொக்கட்டிச்சோலை –அம்பிளாந்துறை பிரதான வீதியை புனரமைக்குமாறு கோhரும் வகையிலான கவன ஈர்ப்பு போராட்டம் இன்று பிரதேச செயலகத்திற்கு முன்பாக நடைபெற்றது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் நடராஜா, முன்னாள் மண்முனை தென் மேற்கு பிரதேசசபை தவிசாளர் புஸ்பலிங்கம் மற்றும் முன்னாள் பிரதேசசபை உறுப்பினர்கள் என சிலர் கலந்துகொண்டனர்.
இன்றைய தினம் பிரதேச செயலகத்திற்கு அபிவிருத்திக்குழு கூட்டத்திற்காக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வருகைதந்த நிலையில் அவரை வழிமறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடிய இராஜாங்க அமைச்சர் உலக வங்கியின் உதவியுடன் குறித்த வீதியை புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் குறித்த வீதி புனரமைக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
அம்பிளாந்துறை-குருக்கள்மடம் இயந்திரப்பாதையூடாக பயணிப்பவர்களிடம் பணமறவீடு செய்வது நிறுத்தப்படவேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளும் இராஜாங்க அமைச்சரிடம் போராட்டக்காரர்கள் முன்வைத்திருந்தமை குறிப்பித்தக்கது.