மட்டு. பாலமீன்மடு வாவியில் மட்டி எடுக்கச் சென்ற குடும்பஸ்தர் மரணம்

0
378

மட்டக்களப்பு முகத்துவாரம் பாலமீன்மடு வாவியில் மட்டி எடுக்க சென்ற குடும்பஸ்தர் வாவியில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு முகத்துவாரம் பாலமீன்மடு வாவி பகுதியில் நேற்றுமாலை தனது மனைவியுடன் மட்டி எடுக்க சென்ற திராய்மடு முதலாம் குறுக்கு வீதி பகுதியை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான 28 வயதுடைய பாக்கியராஜா ரமேஷ் என்பவரே இவ்வாறு வாவியில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக மட்டக்களப்பு சிறுகுற்றப்பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை காரணமாக குடும்ப வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குடும்ப வறுமை நிலை காரணமாக தனது மனைவியுடன் மட்டக்களப்பு முகத்துவாரம் பாலமீன்மடு வாவி பகுதியில் மட்டி எடுக்க சென்ற குறித்த குடும்பஸ்தர் மட்டிகளை சேகரித்த பின் மனைவியை வாவியின் கரைக்கு அனுப்பிவிட்டு குடும்பஸ்தர் மீண்டும் மட்டி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது வாயின் ஆள்பகுதிக்கு சென்ற குடும்பஸ்தர் நீரில் மூழ்கியுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் குறித்து மனைவி உறவினர்களுக்கு அறிவித்ததை அடுத்து, குடும்பஸ்தரை தேடியநிலையில் குறித்த குடும்பஸ்தர் இன்று வாவிப்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி தெரிவித்தார்.

சடலமாக மீட்கப்பட்ட குறித்த குடும்பஸ்தரின் மரணம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு சிறுகுற்றப்பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எம்.ஐ.உவைஸ் தலைமையிலான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.