மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட கம்பி ஆற்று பிரதான வீதியின் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட கம்பி ஆற்று பிரதான வீதி சமுளையடி வட்டையில் இருந்து ஆனை கட்டிய பகுதிக்கு செல்லும் பிரதான வீதி ஆகும்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பருவப்பெயர்ச்சி மழை காரணமாக இவ் வீதியானது வெள்ள அனர்த்தத்தினால் முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளது. இவ்வீதியால் பயணம் செய்யும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் விவசாயிகள் எனப் பலரும் பயணங்களை மேற்கொள்வதில் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.
சமுளையடிவட்டை ஆனை கட்டிய வழி பிரதான வீதியானது போரதீவுப்பற்று பிரதேச பிரிவுக்குட்பட்ட மண்டூர் கமநல கேந்திர நிலையத்துக்கு உரிய விவசாய வீதி என்பதுடன் வெள்ளம் ஏற்படுகின்றபோது ஆணை கட்டிய வழி, நெடிய வட்டை சின்னவத்தை, மாலையர் கட்டு, பலாச்சோலை காக்காச்சிவட்டை ஆகிய மக்கள் முற்றாக பாதிக்கப்படும் நிலையில் மக்களின் நீண்ட கால கோரிக்கைகளுக்கு மத்தியில் தற்போது வீதியின் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
போரதீவுப்பற்று மண்டூர் கமநல சேவை பெரும்பாக உத்தியோகஸ்தர் கோ.யேக்காந்தன் தலைமையில் வீதியினை புனரமைக்கும் பணிகள் இடம் பெற்று வருகின்றனது.