உலக நீர் தினத்தையொட்டி மட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குளங்களைப் புனரமைப்புச் செய்யும் கட்டுமானப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்படும் நிகழ்வு வாகரை பாவக்கொடிச்சேனையில் நேற்று பிற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
‘எங்களது செயற்பாடு எங்களது எதிர்காலம் – பெண்களையும் விவசாயிகளையும் வலுப்படுத்துவோம்.’ எனும் தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்ட இந்த செயல்திட்டத்தில் வாகரைப் பிரதேசத்திலுள்ள திக்கனைக்குளம், மாணிக்கம் குளம், பனிச்சங்கேணிக் குளம் ஆகிய மூன்று குளங்கள் சுமார் 6 கோடி ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு (வீ எபெக்ற்), கொகாகோலா பவுண்டேஷன், இளைஞர் அபிவிருத்தி அகம் ஆகியவை கூட்டிணைந்து இந்த அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுத்துள்ளன.
‘பெண்கள், குழந்தைகள் உட்பட 1,772 வறுமைக்குட்பட்ட குடும்பங்களை இலக்காகக் கொண்டு அவர்களது மேம்பட்ட வாழ்க்கையை உறுதி செய்வதும் 1000 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதும் இதன் பிரதான நோக்கங்களாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு வீ எபெக்ற் நிறுவனத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் நைனா லர்ரீயா அதன் இலங்கைக்கான பணிப்பாளர் தேவசிங்கம் மயூரன் கொகாகோலா பவுண்டேஷன் அமைப்பின் இலங்கை மாலைதீவு பிராந்திய இணைப்பாளர் லக்ஷான் மதுரசிங்ஹ மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கே. கருணாகரன், உட்பட துறைசார் அதிகாரிகள் அரசியல் பிரதிநிதிகள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.