இந்தியா – சென்னை மக்களை அச்சுறுத்தி வந்த மண்டூஸ் சூறாவளியின் மையப்பகுதி, அதிகாலை 2.30 மணி அளவில் கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் கடந்த 5ஆம் திகதி உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிர புயலாக வலுப்பெற்று, வங்க கடல் பகுதியில் நேற்று காலை வரை நிலைக்கொண்டு இருந்த மண்டூஸ் சூறாவளி இன்று; அதிகாலை 2.30 மணியளவில் முழுமையாக கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சூறாவளி கரையைக் கடந்தபோது சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் 75 கிலோ மீற்றர் வரை பலத்த காற்று வீசியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழ்நாட்டில் நேற்று 26 மாவட்டங்களில் பாடசாலைகள், கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. சூறாவளி கரையை கடந்துள்ளதால் தமிழகத்தில் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றால் மின்சார இணைப்புக்களுக்கும் சேதமேற்பட்டுள்ளது. சூறாவளி கரையைக் கடந்த நிலையிலும், தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.