மண்முனை தென் எருவில் பற்று
பிரதேசசபையின் அமர்வு

0
385

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் அமர்வு இன்றைய தினம் பிரதேசசபையின் தவிசாளர் ஞா.யோகநாதன் தலைமையில் ஆரம்பமானது.பிரதேசசபையின் சம்பிரதாயங்களுடன் ஆரம்பமான சபையின் மாதாந்த அமர்வின்போது புதிய உபதவிசாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள மே.வினோராஜிக்கு வரவேற்பளிக்கப்பட்டு சபை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்து சிறந்த ஒரு அதிகாரியை நியமனம் செய்ய நடவடிக்கையெடுக்கவேண்டும் என இன்று மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பிரதேச செயலாளரின் செயற்பாடுகளினால் பொதுமக்களுக்கு சேவைகள் வழங்குவதில் நெருக்கடியை எதிர்கொள்வதன் காரணமாக அவரை இடம்மாற்றம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின் அனுமதியில்லாமல் சில அமைப்புகள் பெயர்ப்பலகை நடுகை செய்வது குறித்தும் அதில் பிரதேசசபையின் சின்னம் மற்றும் பெயர்களை பயன்படுத்துவது குறித்தும் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
இதன்போது வைக்கப்பட்ட பெயர்ப்பலகை குறித்து கேள்வியெழுப்பிய பிரதேசசபை உறுப்பினர்களை சிலர் அவதூறாகப்பேசிய விடயங்களுக்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டதுடன் அவ்வாறானவர்களை அழைத்துபேசவும் தீர்மானிக்கப்பட்டது.

இதேபோன்று பிரதேசசபையின் ஊடாக ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள குடும்பத்தினை தலைமைதாங்கும் பெண்களை தெரிவுசெய்து அவர்களுக்கான வாழ்வாதார திட்டங்களை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோதும் அது தொடர்பான செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கவேண்டாம் என கிராம சேவையாளர்களுக்கு பிரதேச செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளதாக உறுப்பினர்களினால் தெரிவிக்கப்பட்டது.
பிரதேச செயலாளர் தொடர்ச்சியாக பிரதேசசபையின் தவிசாளர் மற்றும் கௌரவ உறுப்பினர்களை அவமதிக்கும் வகையில் செயற்பட்டுவருவதுடன் பிரதேசசபையின் செயற்பாடுகளுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலேயே செயற்படுவதாக உறுப்பினர்களினால் தெரிவிக்கப்பட்டது.இதன்போது உபதவிசாளர் மே.வினோராஜினால் பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்து புதிய பிரதேச செயலாளரை நியமிக்கவேண்டும் என்ற பிரேரணை சபையினால் ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டதுடன் குறித்த தீர்மானத்தினை ஜனாதிபதி மற்றும் அமைச்சுகளுக்கு அனுப்புவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.