மன்னார் மேல் நீதிமன்றத்தினால், இராணுவ சிப்பாய் ஒருவருக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பரப்புக்கடந்தான் இராணுவ முகாமில், 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டின் போது, கடமையில் இருந்த 2 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன், ஒருவர் காயமடைந்த சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவச் சிப்பாய் கைதுசெய்யப்பட்டு, மன்னார் மேல் நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதனால், இராணுவச் சிப்பாய்க்கு, 14 வருடங்களின் பின்னர், மன்னார் மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
முருங்கன் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, தீர்ப்பிற்காக, இன்று, மன்னார் மேல் நீதிமன்றத்தில், நீதிபதி எம்.எம்.எம்.மிகால் முன்னிலையில்
எடுத்துக்கொள்ளப்பட்டது.
2 மனிதப் படுகொலைகள் இடம்பெற்றமை உறுதிசெய்யப்பட்ட நிலையில், மேல் நீதிமன்ற நீதிபதியால், இராணுவச் சிப்பாய்க்கு, மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.
தீர்ப்பு வழங்கும் போது, மேல் நீதிமன்றத்தின் அனைத்து மின் விளக்குகளும் அணைக்கப்பட்டு, நீதிமன்ற கதவுகள் பூட்டப்பட்டு தீர்ப்பு எழுதப்பட்டதோடு
தீர்ப்பு எழுதப்பட்ட பேனா, நீதிபதியால் உடைக்கப்பட்டது.
அதன் பின்னர் குற்றவாளியை, போகம்பரை சிறைச்சாலைக்கு அனுப்புமாறு கட்டளையிடப்பட்டது.