மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும், கனிய மணல் அகழ்வின் முதற்கட்ட செயற்பாடான, கனிய மணல் பரிசோதனை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு, கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில், குறிப்பாக தீவு பகுதியின் பல இடங்களில், கனிய மணல் அகழ்வு நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
இந்த அகழ்வு நடவடிக்கை தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல், மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில், இன்று காலை 10.30 மணியளவில், மன்னார் நகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன் போது, கல்துரையாடலில் பங்கேற்றவர்கள் ஒன்றிணைந்து, மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும், கனிய மணல் பரிசோதனை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு, கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலந்துரையாடலில், அவுஸ்திரேலியா கனிய மணல் அகழ்வு நிறுவனத்தின் இலங்கைக்கான பொறுப்பாளர் சாலிய பங்கேற்றார்.
அத்துடன், மன்னார் சுற்றாடலை பாதுகாக்கும் அமைப்பின் பிரதிநிதிகள், உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள், பொது மற்றும் தனியார் அமைப்புகளின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன் போது, மன்னார் மாவட்டத்தில், கனிய மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மாவட்டத்தில் ஏற்படவுள்ள அபாய நிலை குறித்து, மன்னார் சுற்றாடலை பாதுகாக்கும் அமைப்பினால் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டதுடன், மாவட்டத்தில், கனிய மணல் அகழ்வினால், எதிர்வரும் காலங்களில் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டது.
அதனால், மாவட்டத்தின் எதிர்கால நலனை கருத்திற்கொண்டு, மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் கனிய மணல் அகழ்வின் முதற்கட்ட செயற்பாடான, கனிய மணல் பரிசோதனை நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு, கூட்டாக கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதன் போது கருத்து வெளியிட்ட, அவுஸ்திரேலியா கனிய மணல் அகழ்வு நிறுவனத்தின் இலங்கைக்கான பொறுப்பாளர் சாலிய,
மக்களின் பாதுகாப்புக்கு தீங்கை ஏற்படுத்தும் வகையில், கனிய மணல் அகழ்வு இடம்பெறாது.
உரிய சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே, அகழ்வு இடம்பெற்று வருகின்றது.
எனவே, மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், குறித்த அகழ்வு பணி இடம்பெறாது.
அகழ்வு நடவடிக்கைகளுக்காக கொண்டுவந்த இயந்திரங்களை எடுத்துக் கொண்டு, உடனடியாக மன்னாரை விட்டு செல்கின்றோம்.
என குறிப்பிட்டார்.
இந்த நிலையில், மன்னார் மாவட்ட மக்கள் சார்பாக, அனைத்து தரப்பினரும் கைகளை தட்டி, உடனடியாக குறித்த நடவடிக்கையை முன்னெடுங்கள் என தெரிவித்தனர்.
அதனையடுத்து, குறித்த கலந்துரையாடல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.