இலங்கை முழுவதும் உள்ள பாடகர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி தருவதாக கூறி எவரஸ்ட் எவ்.எம் என்ற பதிவுசெய்யப்படாத நிறுவனம் ஒன்று முகநூல் ஒன்றின் ஊடாக பாடல் போட்டி தெரிவை நடாத்தி நேற்றைய தினம் இறுதிப்போட்டி என அழைத்து பல இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டு போட்டியாளர்களை ஏமாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்திலிருந்து மாத்திரமல்லாது இலங்கையின் பல பகுதிகளில் இருந்தும் குறித்த போட்டியில் தமது திறமைகளை வெளிக்காட்டுவதற்கு கலைஞர்கள் வருகைதந்திருந்தனர்.
மூன்று மாதங்களாக குறித்த போட்டியை பதிவுசெய்யப்படாத வானொலி ஒன்றின் ஊடாக விளம்பரப்படுத்தி தென்னிந்தியாவிலிருந்து பாடகர்கள் நடுவர்களாக கலந்துகொள்வதாக தெரிவித்தும் பல இலட்சம் பெறுமதியான பரிசில்கள் இருப்பதாக தெரிவித்தும் கலந்துகொள்பவர்களிடம் ஆயிரத்து 750 ரூபாய் வீதம் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுமாறு குறித்த குழுவால் தெரிவிக்கப்பட்டு ஆரம்பகட்ட பண வசூல் இடம்பெற்றுள்ளது.
இறுதிப்போட்டியில் கலந்துகொண்டவர்களிடம் ஆயிரத்து 750 ரூபாயும் மற்றும் பார்வையாளர்களிடம் 400 ரூபாயும் வசூலித்து மண்டபத்திற்குள் அனுமதி வழங்கியிருந்தனர்.
சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பணம் செலுத்தி குறித்த நிகழ்சியை பார்வையிடுவதற்காக காத்திருந்தனர்.
8 மணிக்கு ஆரம்பிப்பதாக அறிவித்த போட்டிகள் 11 மணியளவில் ஆரம்பித்தாகவும் இசைக்கு சம்பந்தமே இல்லாதவர்கள் நடுவர்களாக கலந்துகொண்டதாகவும் குறிப்பாக மன்னார் நானாட்டான் பிரதேச செயலகத்தில் நடனத்துடன் சம்பந்தப்பட்ட கலாச்சார உத்தியோகத்தர் ஒருவரும் அடையாளம் தெரியாத மூவரும் நடுவர்களாக கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் பலமுறை நிகழ்ச்சியின் இடைநடுவே முரண்பாடுகள் ஏற்பட்டு வந்தநிலையில் குண்டர்கள் சிலர் போட்டியாளர்களை மிரட்டி அமர வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் ஏமாற்றப்பட்ட போட்டியாளர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கிய நிலையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.
இருப்பினும் போட்டி ஒழுங்கான முறையில் இடம்பெறவில்லை என்பதுடன் வெற்றியாளர்களும் தெரிவுசெய்யப்படவில்லை.
குறித்த போட்டியில் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் பல போட்டியாளர்கள் கலந்துகொண்டு பணத்தினை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.