மன்னார் மாவட்டத்தில் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான பெரும் போக பயிர்ச் செய்கைக்கான முதலாவது நீர் விநியோகம் இன்று காலை 10.30 மணியளவில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. பெரும் போகத்தில் 31 ஆயிரத்து 339 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
வடக்கு மாகாணத்தில் உள்ள இரண்டாவது பெரியகுளமான முருகன் கட்டுக்கரைகுளம் பெரிய உடைப்பு துருசு பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் சர்வ மத தலைவர்களின் ஆசியுடன் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில், நீர்ப்பாசன பணிப்பாளர், முருங்கன் கட்டுக்கரை குளம் நீர்ப்பாசன பொறியியலாளர், அரசாங்க திணைக்கள அதிகாரிகள், வாய்க்கால் அமைப்பு பிரதிநிதிகள், விவசாயிகள் பங்கேற்றனர். தற்போது, கட்டுக்கரை குளத்தில் 8.3 அடி நீர் காணப்படுவதுடன் மேலும் நீர்வரத்து காணப்படுகின்றது. அந்தவகையில் கடந்த 18 ஆம் திகதி மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய முதலாவது நீர் விநியோகம் இன்று இடம்பெற்றது.