மன்னார் பொது வைத்தியசாலையில் மகப் பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணம் அடைந்த தாய் மற்றும் சிசுவின் மரணத்திற்கு நீதி கோரி மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இரவு 8 மணியளவில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. தாயின் மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும், தவறு செய்தவர்கள் கைது செய்யப்பட வேண்டும், வைத்தியசாலை நிர்வாகம் மாற்றப்பட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் போராட்டம் இடம்பெற்றது.
போராட்டத்தின் போது பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்ட நிலையில், வைத்தியசாலைக்குள் போராட்டகாரர்கள் நுழைய முற்பட்ட போது கலவரம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக கலகம் அடக்கும் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் அங்கு வரவழைக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையிலான குழுவினர் இறந்த பெண்ணின் பெற்றோரிடம் கலந்துரையாடிய போதும் சுமூகமான நிலை ஏற்படவில்லை.
போராட்டகாரர்கள் தொடர்ந்தும் கொட்டும் மழையில் மன்னார் பொது வைத்தியசாலை முன் வீதியையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்ட விசேட குழு பிரதிநிதிகள் அடங்கலாக உயிரிழந்த பெண்ணின் தாய் மற்றும் உறவினர்கள், சட்டத்தரணிகள்,
மத தலைவர்களை உள்ளடக்கி விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் சுமார் 2 மணித்தியாலங்களுக்கு மேலாக இடம்பெற்றது. இதன்போது குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது முதல் அவர் உயிரிழக்கும் வரை அங்கு நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து உயிரிழந்த பெண்ணின் தாயார் குறித்த குழுவினரிடம் தெரிவித்தார். மேலும் இம் மரணங்களுக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார். இதன் போது உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழுத்து மூலம் தீர்வுக்காக கோரிக்கையை சமர்ப்பிக்குமாறு குறித்த குழுவிடம் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்ட குழுவின் இரண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலும், மாகாண பணிப்பாளர் தனது விசாரணை குழுவை நியமித்து மூன்று நாட்களில் தமது விசாரணையை முடிப்பதாகவும், வாக்குறுதி வழங்கியுள்ளார். இந்த விடையங்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட வைத்தியர்கள் உள்ளடங்களாக அனைவருக்கும் உரிய நடவடிக்கை எடுப்பதாக மாகாண பணிப்பாளர் எழுத்து மூலம் உத்தரவாதம் வழங்கினார். குறித்த உத்தரவாதத்தை ஏற்றுக் கொண்டு உயிரிழந்த பெண்ணின் தாய் மற்றும் உறவினர்கள் அங்கிருந்து சென்றனர்.
எனினும் இரண்டு அரசியல் கட்சிகளின் முன்னாள் நாடாளுமன்ற வேட்பாளர்கள் குறித்த உத்தரவாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் மக்களை திசை திருப்பிய நிலையில் அங்கு மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் பொலிஸார், விசேட அதிரடிப்படை மற்றும் கலகம் அடக்கும் பொலிஸார் இணைந்து வைத்தியசாலைக்கு முன் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பலவந்தமாக வெளியேற்றியிருந்தனர்.இதனால் சில மணி நேரம் மன்னார் வைத்தியசாலை பிரதான வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.