மயக்க மருந்து கொடுத்து நகைகள், வாகனங்கள் திருட்டு! வவுனியாவில் இருவர் கைது!!

0
46

வடக்கு மாகாணத்தில் மயக்க மருந்து கொடுத்து நகைகள் மற்றும் வாகனங்களைத் திருடும் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

நாடு முழுவதும் மயக்க மருந்து கொடுத்து நகைகள் மற்றும் வாகனங்களை திருடும் குழு ஒன்று செயல்பட்டு வருகின்றது.

அதுபோன்று, வடக்கிலும் அவ்வாறான குழு ஒன்று செயல்பட்டு வந்தது.
அந்தக் குழுவால், வவுனியா நகர்ப் பகுதியில் இருந்து சிவப்பு நிற ஓட்டோ ஒன்றை வாடகைக்கு அமர்த்திச் சென்று, அதன் சாரதிக்கு மயக்க மருந்தைக் கொடுத்து கீழே விழுத்திவிட்டு குறித்த ஓட்டோவை கடத்திச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.

இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த ஓட்டோ நீல நிற வர்ணப்பூச்சு பூசி வாகன இலக்கத்தகடு மாற்றப்பட்டு விற்பனை செய்திருந்தமை தெரிய வந்ததையடுத்து அந்த ஓட்டோ மீட்கப்பட்டது.

அத்துடன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் வடக்கில் இடம்பெற்ற மேலும் சில குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டமை தெரிய வந்துள்ளது.

வவுனியா, உளுக்குளம் பகுதியில் வைத்து ஓட்டோ சாரதி ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து விட்டு அவரது ஒன்றே கால் பவுண் மோதிரத்தை திருடிச் சென்றமை தெரியவந்துள்ளது.

மேலும், மன்னார், அடம்பன் பகுதியில் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து ஒன்றே கால் பவுண் மோதிரத்தை திருடிச் சென்றமை மற்றும் மல்லாவி பகுதியில் டிப்பர் சாரதி ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து 2 பவுண் சங்கிலியை திருடிச் சென்றமை என்பனவும் தெரிய வந்துள்ளன.

இதனையடுத்து, திருடப்பட்ட நகைகள் விற்கப்பட்ட இடத்தில் உருக்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு குறித்த இரு நபர்களிடம் இருந்தும் ஓட்டோ மற்றும் நான்கரைப் பவுண் நகை என்பன மீட்கப்பட்டுள்ளன. இச் சம்பவம் தொடர்பல் ஹற்றன் பகுதியைச் சேர்ந்த 45 வயது நபரும், மன்னார் வங்காலைப் பகுதியைச் சேர்ந்த 47 வயது நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.