25 C
Colombo
Thursday, November 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

‘மலையகம்’ என்ற அடையாளத்தை ஒழிக்க இ.தொ.கா. முயற்சி! – ராதா குற்றச்சாட்டு

“மலையகம் என்ற அடையாளத்தை இல்லாதொழிக்கும் முயற்சியில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஈடுபடுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதத்திலேயே இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் உரை அமைந்துள்ளது.”

-இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியாவில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது கொள்கை விளக்க உரையில் மலையக மக்கள் தொடர்பில் எதுவும் குறிப்பிடவில்லை என நாம் சுட்டிக்காட்டியிருந்தோம். எனினும், ஜனாதிபதியின் உரையை நியாயப்படுத்தும் வகையில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கருத்து வெளியிட்டுள்ளார். அதாவது மலையக மக்களும் இலங்கை பிரஜைகள்தான். எனவே, இலங்கை மக்கள் தொடர்பில் கதைத்தால்போதும் என்ற கோதாவில் அவர் உரையாற்றியுள்ளார்.

மலையகத் தமிழர்களும் இந்நாட்டில் வாழும் தேசிய இனம்தான். எமக்கென தனித்துவமான அடையாளங்கள் உள்ளன. மலையகத் தமிழர்கள், பெருந்தோட்ட மக்கள் என்ற அடிப்படையில் எமக்கு தேசிய மட்டத்தில் கோட்டாக்கள் கிடைக்கின்றன. அரச வேலை வாய்ப்பு, பல்கலைக்கழக வாய்ப்பு உள்ளிட்ட விடயங்களின்போது இந்த அடையாளம் எமக்கு உதவியாக இருக்கின்றன. எனவே, இவற்றை தொலைத்துவிடமுடியாது. எனவே, மலையகத் தமிழர்கள் என்ற அடையாளத்தை நாம் இழந்துவிடக்கூடாது.

மலையகத் தமிழர்களும் இலங்கையர்கள்தான் என்ற மனநிலை ஜனாதிபதிக்கு இருந்திருந்தால், எதற்காக அம்மக்களுக்கு மட்டும் கோதுமை மா சலுகையை வழங்கி பிரித்துக்காட்ட வேண்டும், எம்மவர்கள் யாசகர்களா? அதேபோல சம்பள விடயத்திலும் பாகுபாடுகள் காட்டப்படுகின்றன.

நாட்டில் இன்று பொருளாதாரம் மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. கொரோனாமீது மட்டும் பழிசுமத்திவிட முடியாது, அரசின் முறையற்ற முகாமைத்துவமும் இதற்கு பிரதான காரணமாகும்” – என்றார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles