மலையக மண்ணில் இருந்து, வறுமை முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும்: பாரத் அருள்சாமி

0
127

மலையக மண்ணில் இருந்து, வறுமை முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனவும், அதற்காகவே, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் போராடிக் கொண்டிருக்கின்றது எனவும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உப தலைவரும், பிரஜாசக்தி செயல் திட்ட பணிப்பாளருமான பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.
இயற்கை அனர்த்தம் மற்றும் பொருளாதார ரீதியில் பாதிக்கபட்ட, நாவலப்பிட்டி பகுதியை சேர்ந்த பெண்களுக்கு, அவர்களின் சுகாதார மற்றும் வாழ்வியலை மேம்படுத்தும் நோக்கில், நிவாரண பொதிகள் வழங்கப்பட்ட வேளை, இவ்வாறு குறிப்பிட்டார்.
நாவலப்பிட்டி பகுதி, பார்கேபல் தோட்டம், ஹையிட்ரி தோட்டம் போன்ற பகுதிகளில், இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் வழிகாட்டலின் கீழ், புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக, ஐக்கிய நாடுகளின் சனத்தொகைக்கான நிதியத்தின் நிதி உதவியுடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உப தலைவர் பாரத் அருள்சாமியின் ஏற்பாட்டில், பெண்களுக்கு, நிவாரண பொதி கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உப தலைவர் பாரத் அருள்சாமி, ஐக்கிய நாடுகளின் சனத்தொகைக்கான நிதியத்தினுடைய இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி குன்லே அதெனியி, புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் நாயகம் மற்றும் பிரதிநிதிகள், பிரஜாசக்தி நிறுவன பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.