மஹிந்தவால் இலங்கைக்கு பல சவால்கள் – கிரியெல்ல

0
284

மஹிந்த ஆட்சிக் காலத்தில் பிழையான வெளிவிவகார கொள்கைகளால் இலங்கை பல சவால்களுக்கு முகம்கொடுத்தது. பல பிரச்னைகளை தானாகத் தேடிக் கொண்டது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

2015 இல் மஹிந்த ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் 11 தலைவர்கள் இருந்தனர். சந்திரிகா குமாரதுங்க, டி.பி.விஜயதுங்க,ரணசிங்க பிரேமதாஸ,ஜெ.ஆர்.ஜெயவர்த்தன,சிறிமாவோ பண்டாரநாயக்க,பண்டாரநாயக்க,விஜயாநன்த தஹநாயக்க,ஜோன் கொதலாவல,டட்லி சேனாநாயக்க,டி.எஸ். சேனாநாயக்க ஆகியோர் அதிகாரத்தில் இருந்தனர்.ரணில் விக்கிரமசிங்கவும் 4 தடவைகள் பிரதமராக இருந்தார்.

இவர்கள் கையாலாத விடயங்களை மஹிந்த ஒரு தலைப்பட்சமாக ஒரு பக்கம் சார்ந்து செயல்பட்டார்.

மஹிந்த ஆட்சிக் காலத்தில் பிழையான வெளிவிவகார கொள்கைகளால் இந்நாடு பல சவால்களுக்கு முகம்கொடுத்தது. பல பிரச்னைகளை தானாகத் தேடிக் கொண்டது.

இந்தியா எமது அயல் நாடு, மஹிந்த ஆட்சிக்கு வந்ததும் வரையரையின்றி சீனா சார்பாக நடந்து கொண்டதால் இந்தியாவுக்கு அது சங்கடமாக இருந்தது. முன்னைய சகல ஆட்சியாளர்களும் சகல தரப்புக்களுடனும் நடுவுநிலையாக நடந்து கொண்டனர். இந்தியாவை தூரப்படுத்தவில்லை.

சீனா சார்பாக கடன்மூலம் இன்னும் இலங்கை சிக்கிக்கொண்டது. முன்னைய ஆட்சியாளர்கள் முதலாளித்துவ நாடுகளுடனும் கூட நடுவுநிலையாக நடந்து கொண்டனர்.இந்த நிலையைத் தாண்டி மஹிந்த அரசாங்கம் சீனாவுடன் அளவுமீறி உறவுகளைப் பேணியது.

இன்று கொழும்புத் துறைமுக கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குமாறு அமெரிக்கா இலங்கைக்கு கூறுகிறது.

இன்னும் சில நாள்களில் பிறிதொருவர் வந்து திருகோணமலையைக் கேட்பார். இந்நிலையை உருவாக்கியது மஹிந்தவின் ஆட்சியாகும்.

சீனாவிடமிருந்து பெற்ற கடன் மூலம் பெற்ற நலன் என்ன? வருடாந்தம் கடனுடன் வட்டியையும் சேர்த்து வழங்குகின்றோம்.இது தான் நாங்கள் பெற்ற நன்மை.

கிழக்கு முனையம் தொடர்பில் மஹிந்த ராஜபக்‌ஷ, தொழிற்சங்கத்திடம் என்ன கூறினார்? அவரின் நிலைப்பாட்டுக்கு இந்தியா என்ன பதிலளித்தது. அதற்கு இந்தியா என்ன கூறியது. 2019 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை தடைமுறைப்படுத்துமாறு கூறியுள்ளனர்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கையின் பாதுகாப்பு மிக அவசியமாகும். இதற்கு முன்னர் இவ்வாறான ஒரு வெளிவிவகார செயல்பாட்டை முன்னெடுத்த அரசாங்கம் ஒன்று எமது நாட்டில் இருக்கவில்லை.

அதேபோல் மியன்மாரில் ஏற்பட்டுள்ள இராணுவ ஆட்சியோடு தொடர்ந்தும் இராஜதந்திர உறவுகளைப் பேணுவதாக வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ ஆட்சிக்கு ஆதரவு கொடுப்பது சர்வதேச ஜனநாயக ஒப்பந்தங்கள், சட்டங்களுக்கு முரணான நிலைப்பாடாகும் எனத் தெரிவித்தார்.