மாகாண சபைத் தேர்தலை 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பழைய முறையிலாவது நடத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலிலும் பொதுஜன பெரமுன நாடளாவிய ரீதியில் வெற்றி பெறும் என கைத்தொழில் விருத்தி மனைப்பொருளாதார மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அநுராதபுரத்தில் இன்று நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குறுகிய காலத்துக்குள் பிரபல அரசியல் கட்சியாக வளர்ச்சி பெற்றுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றிபெற்றுள்ளது.
2021ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டம் சிறந்த முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தலை உரியகாலத்தில் நடத்த முடியாமல் போனதற்கு கடந்த அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும்.
மாகாணசபைத் தேர்தலை 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பழைய முறையிலாவது நடத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதற்கான பேச்சுக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ளன.
மாகாண சபைத் தேர்தலில் பொதுஜன பெரமுன நாடளாவிய ரீதியில் அமோக வெற்றி பெறும். பொதுஜன பெரமுனவுக்கு மக்கள் முழுமையான ஆட்சி அதிகாரத்தை வழங்குவார்கள்.
தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதே அரசாங்கத்தின் பிரதான இலக்கு. அதற்கான நடவடிக்கை இனி துரிதமாக முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.