மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் கிளை வீதிகளை பயன்படுத்தி வேறு மாகாணங்களுக்கு செல்ல முற்படும் நபர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (11) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.
அத்தகைய நபர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாகக் கருதி, தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இன்று நள்ளிரவு 12 மணி முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாகவும், தேவையற்ற பயணத்தைத் தவிர்க்குமாறும் அவர் பொது மக்களை கேட்டுக்கொண்டார்.
ஒவ்வொரு மாகாண எல்லைக்கும் அருகே பொலிஸ் அதிகாரிகள் மற்றும் முப்படை அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவித்த அவர், மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய சேவைகள் அதே முறையில் செயற்படுத்தப்படும் என குறிப்பிட்டார்.
இதேவேளை, மாகாண எல்லைகளில் கடமையில் இருக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு அவர்களின் கடமையை செய்ய மக்களின் ஆதரவை எதிர்ப்பார்ப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், ஏதாவது ஒரு பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் குறித்த பிரதேசங்களை சேர்ந்தவர்களுக்கு முற்றிலும் பயணத்தடை விதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
அதேபோல், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களை சேர்ந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு எந்த சந்தர்ப்பத்திலும் பிரதேசத்தில் இருந்து வௌியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.