தற்போதுள்ள சூழ்நிலையில் மாணவர்கள் தொழிலுக்கு செல்ல வேண்டும் என்கின்ற கருத்தானது தொடர்ச்சியாக அவர்களது கல்வி உரிமையை மறுக்கின்ற வகையில் எதிர்காலத்தில் அமையக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது எனஇலங்கை அரசாங்க ஆசிரியர்களின் சங்கத்தின் உபதலைவர் ஜீவராசா ருபேஷன் தெரிவித்தார்.
இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
அண்மையில் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார பாடசாலை மாணவர்கள் தொழிலுக்கு செல்ல முடியும் என சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவரப்போவதாக அறிக்கையினை முன்வைத்திருந்தார்.
இந்த அறிக்கையில் மாணவர்கள் தனியார் நிறுவனத்தில் 20 மணித்தியாலங்கள் வேலை செய்யலாம் என்ககன்ற விடயத்தை மாத்திரம் குறிப்பிட்டிருந்தார் எனினும் இது தொடர்பாக எவ்வித கருத்துக்களையும் முன்வைக்கவில்லை.
எமது நாட்டில் தற்போது நிலவி வரும் பொருளாதார நிலையில் நமது மாணவர்கள் தங்களுடைய குடும்ப சுமைகளை சுமக்கின்ற சூழ்நிலைக்கு கூட தள்ளப்பட்டிருக்கிறார்கள் இவ்வாறான மாணவர்களுக்கு அமைச்சர் கூறிய அதாவது தனியார் துறைகளில் தொழில் புரியலாம் என்கின்ற கருத்தானது அந்த மாணவர்கள் தொழிலுக்கு சென்று பணத்தை தங்களுடைய கைகளில் எடுக்கின்ற போது கல்வியை விட்டு பணத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டு கல்வியை தொடர முடியாத அல்லது கல்வியில் இருந்து இடை விழகுகின்ற சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர் ஒரு வாய்ப்பு காணப்படுகின்றது.
உலகளாவிய ரீதியில் கூட சிறுவர் தொழிலாளர்களை பலரும் பல ஆய்வாளர்கள் சமூக ஆர்வலர்கள் எதிர்த்து கொண்டிருக்கின்ற இந்த சூழ்நிலையில் இலங்கையில் பாடசாலை மாணவர்கள் தொழிலில் அமர்த்தலாம் என்கின்ற ஒரு விடயம் கூறப்படுகின்றது இது தொழில் வழங்குகின்ற நிறுவனங்களுக்கு சாதகமாக அமையலாம்.
அமைச்சர் மாணவர்கள் தொழிலுக்குச் செல்லலாம் என குறிப்பிட்ட போதிலும் இந்த மாணவர்கள் எவ்வாறான தொழிலை மேற்கொள்ள வேண்டும், அத்தோடு எவ்வளவு நேரம் தொழிலை மேற்கொள்ள வேண்டும், தொழிலுக்கு செல்கின்ற மாணவர்களுக்கு எவ்வாறான சம்பளங்கள் வழங்க வேண்டும் என்கின்ற ஒரு திட்டத்தினை முன்வைக்கவில்லை.
தொழில் வழங்குகின்ற தனியார் நிறுவனங்கள் சிறுவர் தொழிலாளர்களை தங்களுடைய நிறுவங்களில் வேலைக்கு அமர்த்தி விட்டு இந்த சிறுவர்களுக்கான சரியான சம்பளத்தை கொடுக்காது தங்களுடைய நலன்களில் சிறப்பாக செய்து கொள்ளக் கூடிய சூழ்நிலையை நிலவுகின்றது.
அமைச்சர் கூறிய கருத்திற்கு ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்பதற்கு அப்பால் எங்களுடைய மாணவர்கள் கொவிட் மற்றும் பொருளாதார சூழ்நிலை காரணமாக பல மாணவர்கள் கல்வியை இழந்த நிலையில் தான் இருக்கின்றது எனவே இவர்களது கல்வி கற்கின்ற உரிமையினை நாங்கள் கட்டி காக்க வேண்டிய கடப்பாடு அனைவருக்கும் இருக்கின்றது.
இந்த ஒரு சூழ்நிலையில் மாணவர்கள் தொழிலுக்கு செல்ல வேண்டும் என்கின்ற கருத்தானது தொடர்ச்சியாக அவர்களது கல்வி உரிமையை மறுக்கின்ற வகையில் எதிர்காலத்தில் அமையக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது.
அமைச்சர் இவ்வாறான கருத்துக்களை முன்வைப்பதுடன் நின்றுவிடாது எவ்வாறான திட்டங்களை முன்வைக்க போகின்றனர் என கூறி ஒரு கட்டுப்பாட்டை விதிப்பாராக இருந்தால் பொருளாதார ரீதியில் அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கும் மாணவர்கள் அவர்களுடைய குடும்ப சூழ்நிலை சுமந்து கொண்டிருக்கின்ற மாணவர்களுக்கு இந்தத் திட்டம் உதவியாக அமைந்தாலும் அந்த மாணவர்களுடைய கல்வியிலும் நாம் கவனத்தில் கொண்டு எங்களுடைய நாட்டினுடைய கல்வித் தரத்தினை தொடர்ச்சியாகவும் இப்பொழுது இருக்கின்ற நிலையிலே கட்டிக்காக்க வேண்டிய கடப்பாடும் அனைவருக்கும் இருக்கிறது.
உலகளாவிய ரீதியில் சிறுவர் தொழில் எதிர்க்கப்படுகின்ற நிலையில் நாங்கள் ஒருபோதும் ஆதரிக்கவில்லை எனினும் இன்றைய நிலையிலே பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றது இதற்கு ஒரு சிறந்த தீர்வாக முன் வைக்கின்ற போது பாடசாலைகளில் இவர்கள் தொழில்நிலை கல்வியினை சற்று அவர்கள் இந்த நிலையில் இருந்து விரிவாக்கிக் கொண்டு முன்னெடுக்க கூடிய சந்தர்ப்பங்கள் இந்நாட்களிலே உதயமாகி இருக்கிறது.
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கு இந்த தொழில்முறை கல்வியினை வழங்குவதற்காக புதிய ஏற்பாடுகள் கடந்த அரசாங்கத்தினால் அமைத்துக் கொடுக்கப்பட்டது இந்த தொழில் முறைக் கல்வியை விரிவாக்கி மாணவர்கள் தொடர்ச்சியாக தங்களுடைய பொருளாதார சிக்கலில் இருந்து மீண்டு கொள்வதற்கும் கஷ்டப்படுகின்ற மாணவர்களுக்கு தொழில் நிலையினை கற்றுக் கொள்வதற்கும் சிறந்த ஏற்பாட்டினை செய்து கொண்டு கல்வியினை விரிவாக்கக்கூடிய சந்தர்ப்பம் இருக்கும்.
பல மாணவர்கள் பொது போக்குவரத்தினை நம்பி இருக்கின்றார்கள் அதேபோன்று இந்த மாணவர்களில் பலர் இன்று போக்குவரத்தில் பல சிக்கள்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள் இந்த ஒரு சூழ்நிலையில் நாங்கள் அடிக்கடி தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகிறோம் அரசாங்கம் முதலில் மாணவர்களுடைய பாதுகாப்பினை உறுதி படுத்தி அவர்களுக்கு போக்குவரத்தில் ஈடுபடுகின்ற பட்சத்தில் மாணவர்கள் சரியாக பாடசாலைகளில் சென்று கல்வி கற்று கூடிய சூழ்நிலை இருக்கும்.
இன்று எடுக்கின்ற இந்த ஐந்து நாள் பாடசாலை செல்கின்ற திட்டமானது தொடர்ச்சியாக பெட்ரோல் அல்லது டீசல் பிரச்சினை ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் அல்லது போக்குவரத்து பிரச்சினைகள் தொடர்ச்சியாக காணப்படும் என்றால் நிச்சயமாக மாணவர்களுக்கு ஒரு உள தாக்கத்தினை ஏற்படுத்தும்.
மாணவர்களுக்கு மாத்திரமன்றி ஆசிரியர்களுக்கும் ஒரு உள தாக்கத்தை ஏற்படுத்தும் எனவே சரியான ஒரு மகிழ்ச்சியான மனநிலையோடு பாடசாலைக்கு சென்று கற்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல கூடிய சரியான ஏற்பாடுகளை செய்து கொடுத்தால் மாணவர்களுடைய கல்வி அல்லது மாணவர்கள் கல்வி கற்கின்ற வீதம் அதிகரிக்கும் அல்லது எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என்பது எமது நம்பிக்கை.