மாத்தறை – தெவுந்தர விஷ்ணு தேவாலயத்தின் தெற்கு வாஹல்கடவிற்கு முன்பாக உள்ள சிங்காசன வீதியில் நேற்று இரவு நடந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்களின் பின்னால் வான் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத இருவர், மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்தை ஏற்படுத்தி, துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டுச் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில், ரி-56 ஆயுதத்திற்கான 39 வெற்று தோட்டாக்கள், 2 தோட்டாக்கள், மற்றும் 9 மில்லிமீற்றர் ஆயுதத்திற்கான 2 வெற்று தோட்டாக்கள் மற்றும் 2 தோட்டாக்கள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் துப்பாக்கிதாரர்கள் வந்ததாக சந்தேகிக்கப்படும் வான், துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து சுமார் 800 மீற்றர் தொலைவில் உள்ள ஒரு கிளை வீதியில் எரிக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
வானில் இருந்து ரி-56 ஆயுதத்திற்கு பயன்படுத்தப்படும் ஒரு மெகசின் மற்றும் ரி-56 வெற்று தோட்டாக்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
துப்பாக்கிச் சூட்டில், தெவிநுவர சிங்காசன வீதியை சேர்ந்த 28 வயதான யோமேஷ் நதிஷான் மற்றும் பசிந்து தாருக ஆகிய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இன்று அதிகாலை மாத்தறை மேலதிக நீதவான் மாலன் சிரான் ஜயசூரிய விசாரணைகளை முன்னெடுத்திருந்தார்.
மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.