மாற்றுத்திறனாளிகள் நிவாரணம் கோரி எம்மை ஒருபோதும் அணுகுவதில்லை – ஆளுநர் பாராட்டு

0
23

மாற்றுத்திறனாளிகள் ஒருபோதும் நிவாரணம் தருமாறு எங்களை அணுகுவதில்லை. அவர்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்பதையே விரும்புகின்றார்கள். இதைச் சிறந்ததொரு முன்னுதாரணமாக நாங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார்.

சர்வதேச மாற்றாற்றலுடையோர் தினமும் புதுப்பிரவாகம் நூல் வெளியீடும் யாழ்ப்பாணம் பிரதேச செயலக திறந்தவெளி அரங்கில் நேற்று நடைபெற்றது.

பிரதேச செயலாளர் சா. சுதர்சன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக ஆளுநரும் சிறப்பு விருந்தினராக யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராமும் கலந்துகொண்டனர்.

ஆளுநர் இங்கு மேலும் தெரிவிக்கையில், மாற்றுத்திறனாளிகள் பலர் எங்களை வந்து சந்திப்பார்கள். அவர்களில் ஒருவர்கூட தமக்கு நிவாரணம் தேவை என்று கேட்டதில்லை.

உடலில் எந்தக் குறைபாடுகளும் இல்லாதவர்கள் நிவாரணம் தேவை, அது தேவை, இது தேவை என்று நாடும்போது இவர்கள் அப்படி எங்களை நாடியதில்லை. அவர்கள் தங்கள் சொந்தக் காலில் நின்று சாதிக்கவே விரும்புகின்றார்கள்.
அவர்களை நாங்கள் ஊக்கப்படுத்த வேண்டும். அவர்களிடம் கடின உழைப்பு இருக்கின்றது.

மாற்றாற்றல் உடையவர்கள் அரச அலுவலகங்களை அணுகும் வசதியை உறுதிப்படுத்தும் வகையில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்- என்றார்.