மினுவங்கொடயில் துப்பாக்கிச்சூடு: தந்தை – இரு மகன்கள் பலி

0
172

மினுவாங்கொடை – கமன்கெதர பகுதியில் உள்ள வீடொன்றில் நடத்தப்பட்ட தூப்பாக்கி பிரயோகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.
சம்பவத்தில், 51 வயதான தந்தை, 24 மற்றும் 23 வயதான அவரது இரண்டு மகன்களுமே உயிரிழந்ததாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
மகிழூந்து மற்றும் உந்துருளியொன்றில் வந்த இனந்தெரியாத நபர்கள் வீட்டிற்குள் பிரவேசித்து துப்பாக்கி பிரயோகத்தை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ரீ-56 ரக துப்பாக்கியினால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்த மூவரும், கொலை சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியிலில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இரண்டு தரப்பினருக்கு இடையில் நீண்ட காலம் நிலவி வந்த முரண்பாடு காரணமாக குறித்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைதுசெய்வதற்காக கம்பஹா காவல்துறை அத்தியட்சகரின் தலைமையில் பல குழுக்கள் விசாரணைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.