பயணத்தடைகாரணமாக கடல் மீன்களின் வருகை மற்றும் விற்பனை குறைவடைந்தமையால் மீனுக்கான தேவைப்பாடு அதிகரித்துள்ளது.
ஆற்றிலும் களப்பிலும் மீன் பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும் மீன் பிடியில் ஈடுபடுகின்ற சிலர் மீனுக்கான விலையை அதிகரித்துள்ளதுடன் வெளியூர் வியாபாரிகளுக்கும் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
சாதாரணமான காலப்பகுதியில் பிடிக்கப்படும் ஒரு கிலோமீன் 200 ரூபாய்க்கு விற்கப்படும் அதேவேளை, தற்போது 400 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

பயணத்தடை மற்றும் கொரோனாவின் தாக்கம் காரணமாக தொழிலை இழந்துள்ள அன்றாட தொழிலாளர்களும் வருமானம் குறைந்த மக்களும் இதனால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
ஆகவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்துவதோடு வெளியூர் வியாபாரிகளின் வருகையினை குறைப்பதற்கும் இதன் மூலம் மீனின் விலையினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கும் நடவடிக்கைஎடுக்கவேண்டும் எனஅவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.