கண்டி, பல்லேகலையில் செவ்வாய்க்கிழமை (19) நடைபெற்ற இலங்கை – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி 21 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் மழையினால் கைவிடப்பட்டது. எவ்வாறாயினும் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றியீட்டிய இலங்கை, 3 போட்டிகள் கொணட தொடரை 2 – 0 என தனதாக்கிக்கொண்டது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த நியூஸிலாந்து 21 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 112 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது பிற்பகல் 4.00 மணியளவில் கடும் மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது.
வில் யங் 8 பவுண்டறிகள் உட்பட 56 ஓட்டங்களுடனும் ஹென்றி நிக்கல்ஸ் 46 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். 9 ஓட்டங்களுடன் ஹென்றி நிக்கல்ஸை ஆட்டம் இழக்கச் செய்த மொஹமத் ஷிராஸ், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனது முதலாவது விக்கெட்டைக் கைப்பற்றினார்.
சுமார் ஒன்றரை மணித்தியாலங்களின் பின்னர் மழை விட்டதால், ஆடுகளமும் மைதானமும் மாலை 6.00 மணியளவில் பரீச்சிக்கப்படும் என பிற்பகல் 5.30 மணிக்கு அறிவிக்கப்பட்டது.
ஆனால், அந்த அறிவிப்பு விடுக்கப்பட்ட சற்று நேரத்தில் மீண்டும் மழை பெய்ததால் ஆடுகள பரிசீலனை கைவிடப்பட்டது.
இரவு 7.30 மணியளவில் மழை ஓய்ந்தபோதிலும் அடுத்த பத்தாவது நிமிடத்தில் மீண்டும் கடும் மழை பெய்யத் தொடங்கியது. இதனை அடுத்து இரவு 7.53 மணிக்கு போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இது இவ்வாறிருக்க, முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய குசல் மெண்டிஸ், பெத்தும் நிஸ்ஸன்க, கமிந்து மெண்டிஸ், அசித்த பெர்னாண்டோ ஆகிய நால்வருக்கும் ஓய்வு வழங்கப்பட்டது.
தென் ஆபிரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள அவர்கள் நால்வருக்கும் போதிய ஓய்வு வழங்க தேர்வாளர்கள் தீர்மானித்தனர். அத்துடன் துனித் வெல்லாலகேயும் இப் போட்டியில் விளையாடவில்லை.
இந்த ஐவருக்குப் பதிலாக நிஷான் மதுஷ்க, நுவனிது பெர்னாண்டோ, மொஹமத் ஷிராஸ், அறிமுக வீரர் சமிந்து விக்ரமசிங்க, ஜனித் லியனகே ஆகியோர் இறுதி அணியில் இடம்பிடித்தனர்.
ஆனால், மழை காரணமாக அவர்களால் முழு போட்டியை அனுபவிக்க முடியாமல் போனது. மூன்றாவது போட்டி கைவிடப்பட்ட நிலையில் தொடர்நாயகன் விருது குசல் மெண்டிஸுக்கு வழங்கப்பட்டது. தொடர் நாயகனுக்கான பரிசை குசல் மெண்டிஸ் சார்பில் அவிஷ்க பெர்னாண்டோ பெற்றார்.