முதல்வர் தலைமையில் மட்டக்களப்பு மாநகரசபையின் 63வது சபை அமர்வு

0
142

மட்டக்களப்பு மாநகரசபையின் 63 ஆவது சபை அமர்வு இன்று மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றதுடன் சபை அமர்வுகளின் போது பெரும் அமளிதுமளி ஏற்பட்டது.

வழமையான சம்பிரதாயங்களுடன் சபை ஆரம்பித்த நிலையில் கடந்த அமர்வின் கூட்டறிக்கை சமர்ப்பிக்கும் விடயத்தில் பல்வேறு விதமான வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன.

இன்றைய அமர்வின்போது கூட்டறிக்கை உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல் செயழி ஊடாக தொலைபேசிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் செலவுகளை குறைக்கும் வகையில் உறுப்பினர்களுக்கு கைகளில் கூட்டறிக்கை வழங்கப்படாமை குறித்து சபையில் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன.

இதன்போது குறித்த செயற்பாடுகளுக்கு கடுமையான எதிர்ப்புகள் மாநகரசபை உறுப்பினர்களினால் தெரிவிக்கப்பட்டது.

இது அரச சுற்றுநிரூபம் எனவும் கடந்த அமர்வில் இது சமர்ப்பிக்கப்பட்டு தெரிவிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பில் யாரும் கருத்து தெரிவிக்கவில்லையெனவும் இது தொடர்பில் இன்று எதீர்ப்பு தெரிவிக்கப்படும் நிலையில் அது தொடர்பில் எதிர்ப்புகளை உரிய தரப்புக்கு கொண்டுசெல்வதாக மாநகர முதல்வர் தெரிவித்தார்.

எனினும் குறித்த கூட்டறிக்கை தங்களுக்கு கிடைக்காத காரணத்தினால் ஏற்றுக்கொள்ளமுடியாது என பெரும்பாலான உறுப்பினர்களினால் தெரிவிக்கப்பட்ட நிலையிலும் குறித்த கூட்டறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு தொடர்ந்து சபை அமர்வு முன்கொண்டுசெல்லப்பட்டது.

இதேபோன்று நிதிக்குழுவின் தீர்மானங்கள் சபைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் குறித்த நிதிக்குழு உறுப்பினர்களினால் கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டு குறித்த நிதிக்குழு மாநகரசபைக்கு கொண்டுவரப்பட்டதாக கூறி மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன் மற்றும் பல உறுப்பினர்கள் குறித்த செயற்பாட்டுக்கு எதிராக தமது கருத்துகளை முன்வைத்தனர்.

நிதிக்குழு கூட்டத்தினை பிற்போடுமாறு மூன்று உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தபோதிலும் மாநகர முதல்வர் தமது கோரிக்கையினை புறந்தள்ளி குறித்த நிதிக்குழுவினை கூட்டி தன்னிச்சையாக செயற்படுவதாகவும் அதன் காரணமாக குறித்த நிதிக்குழு தீர்மானத்தை தான் உட்பட பெரும்பாலான தீர்மானங்களை புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்ற நிலையில் மாநகரசபை உறுப்பினர் சிலர் வெளிநடப்பு செய்ததுடன் சிறிது நேரத்தின் பின்னர் மீண்டும் சபை அமர்வில் கலந்துகொண்ட நிலையில் சபையின் நடவடிக்கைகள் பல்வேறு வாதப்பிரதிவாதங்களுடன் முன்கொண்டுசெல்லப்பட்டது.